பாற்பண்ணைத் துறைக்காக SAPP இடமிருந்து 463 மில்லியன் திட்ட வசதியை பெற்றுக்கொண்ட Pelwatte - Morning News

பாற்பண்ணைத் துறைக்காக SAPP இடமிருந்து 463 மில்லியன் திட்ட வசதியை பெற்றுக்கொண்ட Pelwatte

Author
By Author
3 Min Read

முன்னோடி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy நிறுவனம், சிறு அளவிலான விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக  (SAPP  – Smallholder Agribusiness Partnerships Programme) 463 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து கொண்டுள்ளது. முதல் கட்டமாக எதிர்வரும் 6 மாதங்களில் 1000 பாற்பண்ணையாளர்களிடையே இதனை Pelwatte Dairy  பகிர்ந்தளிக்கவுள்ளது.

SAPP என்பது நிதி அமைச்சினால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இது இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்துவதன் மூலமும், பேண்தகு விவசாய நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலமும் விவசாயிகளின் தொழில்நுட்ப மற்றும் வளங்களை மேம்படுத்த உதவுவதில் கவனம் செலுத்துவதுடன்,  நிதி அணுகலை வழங்குவதிலும், தொழில்நுட்ப மற்றும் நிதி அறிவை மேம்படுத்துவதன் மூலம்  வணிக ரீதியான பங்குடமைகளை உருவாக்குவதன் அடிப்படையில் ‘பொது – தனியார் – உற்பத்தியாளர் பங்குடமை’ என்ற முக்கிய அம்சத்தின் மூலம் கிராமப்புற சிறு பாற்பண்ணையாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்ட வசதியானது 4P பெறுமதி சங்கிலி மாதிரியை அடிப்படையிலானதென்பதுடன், இது பொதுத்துறை, கிராமப்புற சிறு பாற்பண்ணையாளர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களை ஒரு பொதுவான தளத்திற்கு கொண்டு வருவதுடன், கிராமப்புற விவசாய சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூக தரங்களை மேம்படுத்தி பால் உற்பத்தியின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.

இந்த திட்ட வசதி மற்றும் செயற்படுத்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த Pelwatte Dairy நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் சுசந்த மல்வத்த, Pelwatte Dairy மதிப்புமிக்க SAPP திட்ட வசதியின் பெறுநர் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்களிடம் தற்போது ஊவா, மத்திய, கிழக்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களை உள்ளடக்கிய 40 க்கும் மேற்பட்ட பால் சேகரிப்பு மையங்களைக் கொண்ட 12,500 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பாற்பண்ணையாளர்களை உள்ளடக்கிய தளம் உள்ளதுடன், நாங்கள் நாளொன்றுக்கு 100,000 லீற்றருக்கும் மேற்பட்ட பாலை பெற்றுக்கொள்கின்றோம். SAPP உடனான எங்கள் இணைப்பானது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு துணைபுரியும் என்று நான் நம்புகிறேன். எங்களுடைய முதல் கட்டமாக, எதிர்வரும் 6 மாதங்களில் 1000 பால் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க SAPP உதவுமென நம்புகிறோம்,” என்றார்.

இந்த திட்ட வசதியின் பயனாளியாக Pelwatte Dairy இனால்,  செயற்திறன் மிக்க மற்றும் மூலோபாய நடவடிக்கைகள் மூலம் தற்போதுள்ள தினசரி பால் உற்பத்தியை இப்போதிருந்து மூன்றாம் ஆண்டில் இரட்டிப்பாக்க  முடியுமாக இருக்கும். இது பாலின் தரம் மற்றும் கால்நடைகளை நிர்வகிப்பதையும் மேம்படுத்தும். இதன் பயனாளியான பாற்பண்ணையாளர்கள் எளிய கட்டணத் திட்டங்களின் கீழ் மானிய வட்டி விகிதங்களுடன் கடன் வசதிகளைப் பெற முடியும். இந்த திட்டம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அதேநேரத்தில், பெண்கள் வலுவூட்டலையும், தொழில்துறையில் இளைஞர்களின் பங்களிப்பையும் மேம்படுத்துகிறது. இந்த முயற்சியானது பல வழிகாட்டிகளின் மேற்பார்வையுடன் இளைஞர் தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிக்கும். SAPP பயனாளிகளுக்கு காலநிலை மாற்றம் மற்றும் மீட்டெழுச்சியின் தாக்கங்கள் குறித்து விளக்கமளிக்கும். மேலும், இந்த திட்ட வசதியானது தீவனம் மற்றும் புல் வழங்குநர்கள் மற்றும் செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

இதன் மூன்றாம் ஆண்டுக்குப் பிறகு 1000 பயனாளி பாற்பண்ணையாளர்கள் நாளொன்றுக்கு 45,000 லீற்றரை உற்பத்தி செய்ய முடியும் என்று Pelwatte Dairy  நிறுவனத்தின் ஆய்வு வெளிப்படுத்துகிறது. இது பாற்பண்ணையாளர்களுக்கு மாதாந்தம் ரூபா 130,000 இனை பெற்றுத்தரும். செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்களாக குறைந்தபட்சம் 10 இளைஞர்களைப் பயிற்றுவிக்கவும் வசதி செய்யவும் நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இதன் முதல் ஆண்டுக்குள் திட்ட பயனாளிகளுக்கு ஆதரவாக 10 வணிக ரீதியான தீவன வளர்ப்பாளர்களை உருவாக்கும். இவை அனைத்திற்கும் மேலாக, இதன் 2 வது ஆண்டில்  பாலுற்பத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்க நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

Pelwatte Dairy ஏற்கனவே திட்ட வசதியின் செயற்திறன் மிக்க மற்றும் வினைத்திறனான பயன்பாட்டை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இதன் மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், வாழ்க்கையை மேம்படுத்தவும், தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் எதிர்பார்க்கின்றது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *