Tamil

SOLEX பெருநிறுவன பொறுப்புத் திட்டம் மூலம் கதிர்காமம், கோத்தமீகமவுக்கு குடிநீர்

நீர்ப் பம்பித் துறையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியான Solex, மீண்டும் ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்புத் (CSR) திட்டத்துடன் கதிர்காமத்தின் கோத்தமீகம எனும் கஷ்டப் பிரதேச கிராமத்திற்கு சென்றது. இத்திட்டமானது, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நிறுவனம் எனும் வகையில் அது அடைந்துள்ள மற்றொரு மைல்கல் என்பதுடன், மிகவும் அத்தியாவசியமான விடயமான சுத்தமான குடிநீரை வழங்கியதன் மூலம் கஷ்டப் பிரதேச மக்களுக்கு அது உதவியளித்துள்ளது.

கதிர்காமம் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கஷ்டப் பிரதேச கிராமமே கோத்தமீகம ஆகும். இங்கு 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதோடு, அவர்கள் குறைந்த மற்றும் சீரற்ற வருமான வாழ்வாதாரங்களுடன் வாழ்கின்றனர். இந்தக் கிராமத்தில், சுத்தமான நீரைப் பெறுவதில் ஒரு உறுதியான அணுகல் இல்லை என்பதுடன், அசுத்தமான நீரை உட்கொள்வது ஒரு பொதுவான சூழ்நிலையாக காணப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்திற்காக, Solex குழாய்க் கிணறு பம்பி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. இது மிகவும் வறண்ட பிரதேசம் என்பதால், இயற்கையான நீர் மூலத்தை அடைய சுமார் 200 அடி ஆழம் தோண்டப்பட்டது.

Solex குழும நிறுவனங்களின் தரக்குறியீடு/ வெகுசன ஊடக பணிப்பாளர் வைத்தியர் சந்தினி விஜயசிறி அவர்களால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீண்டகாலமாக நிலவி வந்த கோத்தமீகம சமூகத்திற்கு நீர் வழங்குவதில் உள்ள இடைவெளியை அவர் கண்டறிந்தார். கொவிட்-19 தொற்றுநோய் காரணமான சவாலான காலகட்டத்தின் மத்தியில், அத்தகைய திட்டத்தை ஏற்பாடு செய்வது அதில் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அதிக ஆபத்தாக இருந்த வேளையிலும் கூட இத்திட்டம் உரிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அபினவராம விகாரையின் கதிர்காமம் நாயக்க தேரர் கபுகம சரணதிஸ்ஸ மற்றும் வண. கெதெல்லகெட்டியே பேமரத்தன தேரர் ஆகியோரின் ஆசிர்வாதத்துடன், வைத்தியர் சந்தினி விஜயசிறியினால் இந்த நீர் விநியோகத்திட்டம் கோத்தமீகமவில் வைபவ ரீதியாக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட அனுமதி தொடர்பிலும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.

இத்திட்டம் பற்றி கூறிய வைத்தியர் சந்தினி விஜயசிறி, “திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு, அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வழங்கிய அனுமதி தொடர்பில் நாம் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு, கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக அமில ருவன் மற்றும் ஹர்ஷ வன்னியாராச்சி ஆகியோர் வழங்கிய ஆதரவை நாம் பாராட்டுகிறோம். கொவிட்-19 தொற்றுநோயின் சவாலான கால கட்டத்தில் இது தொடர்பான எமது Solex ஊழியர்கள் குழுவின் முயற்சியை நான் பெரிதும் மதிக்கிறேன். தொற்றுநோயின் போது, ​​ஆரோக்கியமாக இருப்பதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்று சுகாதாரமாக இருப்பதாகும். இதற்காக தற்போது நீர் எமக்கு முன்னெப்போதையும் விட இன்றியமையாததாக உள்ளது. நாம் ஒரு நிறுவனமாக, எமது நாட்டு மக்களுக்க்கு உதவும் வகையில், சுத்தமான குடிநீரை கிராமப்புறங்கள் அணுகுவதற்கு உதவ, உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் வருடாந்தம் குடிநீர் திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.” என்றார்.

Photo Caption

படம் 1 – கோத்தமீகம மக்களிடம் குடிநீர்த் திட்டம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படுகின்றது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *