விவசாய தொழில்முயற்சியாண்மை வாய்ப்புகளுடன் உள்நாட்டு விவசாய தொழிற்துறையை முன்னோக்கி வழிநடத்தல்

Author
By Author
6 Min Read

இலங்கை ஒரு வளமான விவசாய வரலாற்றையும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தையும் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, நம் முன்னோர்கள் பேண்தகு விவசாய முறைகளை நம்பியிருந்ததுடன், விவசாயமானது பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக இருந்தது வருகின்றது.

கடந்த காலத்தில் விவசாயத்தில் பெரும்பான்மையானவர்கள் சிறப்பாக ஈடுபட்ட ஒரு நாட்டில், தற்போது விவசாயத்திற் தங்கியிருப்போரின் மக்கள் தொகை சுமார் 28% ஆகக் குறைவடைந்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்களிப்பை மட்டுமே செய்கிறது. இந்த எண்கள் விவசாயத் தொழிற்துறையில் அண்மைய வீழ்ச்சியைப் பிரதிபலிப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதன் திறனை விரைவாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் கோரி நிற்கின்றது.

விவசாய தொழிற்துறையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய கவலை, விவசாய ஏற்றுமதியின் பற்றாக்குறை ஆகும். பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய ஏற்றுமதிகளை உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் அதேவேளை விவசாய இறக்குமதிகளை தவிர்ப்பதன் மூலம்  இதனை தீர்க்க முடியும்.

“இன்றைய நிலவரப்படி விவசாய ஏற்றுமதியின் பெறுமதி மொத்த ஏற்றுமதியில் 20% என்பதுடன், இதனை பயிர் விளைச்சலில் இருந்து உள்நாட்டு உற்பத்தி மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதன் மூலம் அதிகரிக்க வேண்டும். தற்போது, ​​ஒரு ஹெக்டேயர் நெற் செய்கையில் இருந்து கிடைக்கும் சராசரி அறுவடை சுமார் 4 டன் என்பதுடன் நன்கு திட்டமிடப்பட்ட பொறிமுறையுடனும் சரியான முதலீடுகளுடனும் இதனை 9 முதல் 10 டன் வரை அதிகரித்துக் கொள்ள முடியும். பொருத்தமான காலநிலை, வளமான மண் மற்றும் வளங்கள் போன்ற விவசாயத்திற்கு ஏற்ற ஏராளமான வளங்களால் இலங்கை வளமாக உள்ளது. எனவே இது தொழில்முயற்சியாண்மை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், தொழில்துறையை உலகளாவிய மற்றும் உள்நாட்டு சந்தைகள் ஆகிய இரண்டிலும் வளரக்கூடிய அளவிற்கு அபிவிருத்தி செய்யும் ஒரு முறையான பொறிமுறையைத் தொடங்குவதற்கான ஒரு விடயமாகும்,”என DIMO Agribusinesses இன் பிரதான செயற்பாட்டு அதிகாரி, பிரியங்கா தேமதாவ தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில், விவசாய தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிப்பதும், இலங்கையர்களை, குறிப்பாக இளைஞர்களை விவசாய தொழில்களில் ஈடுபடுத்த ஊக்குவிப்பதும் மிக முக்கியமாகும். விவசாய தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிப்பதில், புதிய தொழில்நுட்பம் மற்றும் வளங்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசு மற்றும் தனியார் துறை பங்குதாரர்கள் உட்பட அனைத்து துறைகளிலிருந்தும் ஒரு கூட்டு முயற்சி மற்றும் புதிய விவசாய நுட்பங்களைப் பற்றிய அறிவு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே பகிரப்படுவதும் அவசியமாகும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயத்தை நெறிப்படுத்துவது உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும் உதவுவதன் மூலம் ‘வெள்ளை கொலர் உத்தியோகங்கள்’ என்ற எண்ணக்கருவிலிருந்து வெளியேறி விவசாயத்தை ஒரு வணிகமாகக் கருதி அதை நோக்கி மேலும் மக்களை வரவழைக்கவும் ஊக்குவிக்கும். விநியோகம் மற்றும் பெறுமதி சங்கிலிகளை வலுப்படுத்துதல், பெறுமதி சேர்க்கப்பட்டவைகளை ஊக்குவித்தல், வணிக மற்றும் பாரிய அளவிலான உற்பத்திக்கு உதவுதல் மற்றும் புதிய விவசாய நுட்பங்களை புதுமைப்படுத்த புதிய மற்றும் இருக்கும் வளங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் விவசாய தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதில் தனியார் துறையின் பங்கு முக்கியமானதாகும்.

“தனியார் துறையின் வகிபாகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ​​சமூகப் பொறுப்புள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில் டிமோ, நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு விவசாயத் தொழிற்துறையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு விவசாயத் துறையை தங்கள் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses மூலம் அபிவிருத்தி செய்வதற்கு முன்வந்துள்ளது. DIMO Agribusinesses பல வழிகளில் தொழில்துறையை ஆதரிக்க உறுதிபூண்டுள்ளதுடன்,  அண்மைய விவசாய தொழில்நுட்பங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கும், உள்ளூர் விவசாயிகளிடையே பேண்தகு விவசாய முறைகள் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும், புதிய பயிர் பராமரிப்பு தீர்வுகள், விதைகள், உரங்கள், பசுமை வீட்டு விவசாயம் மற்றும் நுண் நீர்ப்பாசன அமைப்புகளை அறிமுகப்படுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது. டிமோவின் விவசாய தொழில்நுட்ப பூங்காக்கள், விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, விதை உற்பத்தி, உழவர் கல்வி மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் பயிற்சி முயற்சிகளில் ஈடுபடுகின்றன,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

விவசாய தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான பயணத்தில், மூன்று முக்கிய தூண்கள் உள்ளதுடன் அவற்றை கருத்தில் கொண்டு உன்னிப்பாக பின்பற்ற வேண்டும். முதலாவதாக, விவசாயத்தை வெறுமனே அறுவடையை அள்ளிக் குவிப்பதாக அன்றி ஒரு வணிகமாகப் பார்க்க வேண்டும். விவசாயத்திற்கான இந்த அணுகுமுறை விவசாயிகள் தங்கள் விவசாய வணிகத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும் அதேவேளை மேலதிக கவனத்துடன் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் உதவும். அனைத்து விவசாயிகளும் வெற்றிகரமான தொழில்முயற்சியாளராக மாறுவதுடன், அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அதேவேளையில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்குமான ஆற்றல் கொண்டவர்கள். இரண்டாவது முக்கியமான அம்சம் ஸ்மார்ட் விவசாயத்தில் கவனம் செலுத்துவதாகும். இது விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும் புதுமையான விவசாய நுட்பங்கள் மூலம் உற்பத்தி செலவைக் குறைக்கவும் உதவுகிறது. ஸ்மார்ட் விவசாயம் தொழில்துறையின் சாத்தியமான அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், புதிய விவசாய நுட்பங்கள், விண்வெளி மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவம் போன்றவற்றை உள்ளடக்கியது. மூன்றாவது அம்சம் பேண்தகு விவசாயமாகும், இது எதிர்கால சந்ததியினருக்காக தற்போதைய வளங்களை பாதுகாக்க உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், பரிந்துரைக்கப்பட்ட விவசாய நுட்பங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பதன் மூலமும் மண்ணைத் தக்கவைத்துக்கொள்வது மிக முக்கியமானதாகும்.

பச்சைவீட்டு பயிர்ச்செய்கை, உள்ளக செங்குத்து விவசாயம், பண்ணை தன்னியக்கமாக்கல், துல்லியமான விவசாயம், புளொக்செயின் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் விவசாயத் தொழிற்துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும். பச்சைவீட்டு பயிர்ச்செய்கை என்பது உகந்த சூழ்நிலைகளில் பயிரை நிர்வகிக்க உதவும் ஒரு நுட்பமாகும். அதே நேரத்தில் உள்ளக செங்குத்து விவசாயமானது பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு சவாலை எதிர்கொள்ளவும், பண்ணை தன்னியக்கமாக்கலானது பயிர் அல்லது கால்நடை உற்பத்தி சுழற்சியை தன்னியக்கமாக்கவும் பயன்படுத்தப்பட முடியும். ஈரப்பதம், பூச்சி தாக்கம், மண்ணின் நிலைமைகள் மற்றும் நுண் காலநிலை போன்ற பயிர் விவசாயத்தின் ஒவ்வொரு மாறுபாட்டையும் கட்டுப்படுத்துவதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க துல்லிய விவசாயம் விவசாயிகளுக்கு உதவுவதுடன், இது இறுதியில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன் செலவுகளை குறைக்கிறது. தொழில்துறையில் முன்னணி தொழில்நுட்பங்களான பிளொக்செயின் போன்றன உரிமையாளர் பதிவுகளைக் கண்டறியவும், விநியோகச் சங்கிலிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உணவு மோசடிகளைக் குறைக்கவும், முழு வெளிப்படைத்தன்மையுடன் வணிகத்தில் ஈடுபடவும் பயன்படுத்தப்படலாம். AI மூலம் இயங்கும் ரிமோட் சென்சர்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் தாவரத்தின் ஆரோக்கியம், மண்ணின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கண்காணிக்க முடியுமென்பதுடன், தீர்மானம் மேற்கொள்வதிலும் விவசாயிகளுக்கு இவை உதவுகின்றன. இந்த புதிய தொழில்நுட்பங்களின் முழுமையான திறனைப் பயன்படுத்தினால், விவசாயத் தொழிற்துறைக்கு நன்கு உதவுமென்பதுடன்,  விவசாய தொழில்முயற்சியாண்மை வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படும் நிலைக்கு தொழிற்துறையானது உயர்த்தப்படுவதை உறுதிசெய்யும்.

விவசாய தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், விவசாய தொழில்முயற்சியாண்மைக்கு ஆதரவளிப்பதற்கும் தொழில்நுட்பம் ஒரு முக்கிய காரணியாகும். புத்தாக்க தொழில்நுட்ப தீர்வுகள் ஏற்கனவே உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அவை பயிர் விளைச்சலை அதிகரிக்க பயன்படுத்தப்படலாம் என்பதை நிரூபித்துள்ளமையானது பல பொருளாதார மற்றும் தொழில்துறை நன்மைகளுக்கான அடித்தளத்தை இட்டுள்ளது. மறுபுறத்தில், தொழில்நுட்பத்திற்கான அணுகல் நிச்சயமாக இந்தத் துறையில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் பங்களிக்கும் அதேநேரத்தில் எல்லைகளைத் தாண்டி தொடர்ந்து புதுமைகளை உருவாக்க உதவுகின்றது. எனவே, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் அவசியத்தை நாடு புரிந்துகொள்வதும், விவசாயத் தொழிற்துறையை தக்கவைத்துக்கொள்வதற்கும், தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், போதுமான தொழில்நுட்ப அறிவோடு விவசாயிகளுக்கு அண்மைய தொழில்நுட்ப தீர்வுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதும் மிக முக்கியமானது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *