‘சொந்துரு திரியவந்தி’ சிகை பராமரிப்பு பொதி அன்பளிப்புத் திட்டம் மருத்துவ நிறுவனங்களில் ஆரம்பம்

Author
By Author
2 Min Read

புற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்படும் சுமார் 80% ஆனோருக்கு கீமோதெரபி சிகிச்சை அவசியமாகிறது. இது முடி உதிர்தல் எனும் பாரிய தாக்கத்தை தரக்கூடிய பக்கவிளைவுகளுடன் இணைந்ததாக, சமூகத்தில் காணப்படும் பல்வேறு தாழ்வுச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு வழியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான உளவியல் பாதிப்புகளை உணர்ந்து, இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமமான குமாரிகா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இயற்கையான கூந்தலுடனான சிகைகளின் அவசியத்தை ஈடு செய்யும் ‘சொந்துரு திரியவந்தி’ எனும் முதன்முதலாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டத்தின் கீழான, பிரசார நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 05 ஆம் திகதி இந்த பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. பெண்ணானவள் அவளது தோற்றம் எவ்வாறாக இருந்தபோதிலும், ஒவ்வொரு பெண்ணும் அழகானவள் எனும் அடிப்படையான நம்பிக்கையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதன் மூலம் புற்றுநோய் கண்டறியப்பட்ட பெண்களுக்கு வருடாந்தம் 6,000 சிகைகளை அன்பளிப்பாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த, குமாரிக்காவுடன் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை, அலுத்கம, பெந்தோட்டை மற்றும் கல்கிஸ்ஸை லயன்ஸ் கிளப் ஆகியன இணைந்துள்ளன.

அதன் அடிப்படையில் முதல் 50 தொகுதி ‘சொந்துரு திரியவந்தி’ பராமரிப்புப் பொதிகளை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு, கடந்த நவம்பர் 01ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) இடம்பெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்டவர்கள் (இடமிருந்து): W.A.D. சுரங்கி (சிகையை பெற்றவர்), டொக்டர் சச்சினி ரஸ்நாயக்க (கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணர்/ சிரேஷ்ட விரிவுரையாளர்), டொக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க (தலைவர் / நம்பிக்கையாளர் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை), மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் (உப வேந்தர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை), பி.எம். சந்திம தனஞ்சனி (தாதி), டொக்டர். ஜயந்த பாலவர்த (புற்றுநோய்ப் பிரிவு தலைவர்), பேராசிரியர் நாமல் விஜேசிங்க (மருத்துவ பீட பீடாதிபதி), டொக்டர் ஜயன் மெண்டிஸ் (மருத்துவ சேவைகள் பணிப்பாளர்), தசுன் யட்டவர (வர்த்தக நாம முகாமையாளர், குமாரிகா Hemas Consumer Brands), லயன் பீலிக்ஸ் தோமஸ் (செயலாளர், லயன்ஸ் கழகம் கல்கிஸ்ஸை).

இத்திட்டத்தின் மூலம், மஹரகமை தேசிய புற்றுநோய் நிறுவனம், கண்டி, பதுளை, கராப்பிட்டி, குருணாகல், அநுராதபுரம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள பொது, தேசிய, ஆதார மற்றும் போதனா வைத்தியசாலைகளுக்கு 50 சிகை பராமரிப்பு தொகுதிகள் கொண்ட பொதிகள் வழங்கப்படவுள்ளன.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *