OIW Accelerate 2020 நிகழ்ச்சித் திட்டம் மூலம் ஆரம்ப நிலை வணிகங்களை ஊக்குவிக்கும் SLASSCOM

Author
By Author
4 Min Read

இலங்கையின் IT/BPM துறைகளுக்கான தேசிய சம்மேளனமாக கருதப்படும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM),  இலங்கையிலுள்ள நோர்வே தூதுவரலாயத்தின் ஆதரவின் கீழ், இலங்கையின் ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூபா 500,000 உதவித் தொகை மற்றும் Oslo Innovation Week 2020 (OIW 2020) இல் சர்வதேச வெளிப்பாட்டையும் வழங்கும் போட்டியான Oslo Innovation Week Accelerate 2020 (OIW Accelerate 2020) ஐ ஏற்பாடு செய்துள்ளது.

கொவிட் – 19 ஐ எதிர்த்துப் போராடவும், தொற்றுநோயின் விளைவாக ஏற்படக்கூடிய சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் உதவும் புத்தாக்க தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடனும் கூடிய ஆரம்ப நிலை வணிகங்களை ஊக்குவிப்பதும், அடையாளம் காண்பதும் இந்த போட்டியின் நோக்கமாகும். இந்த முயற்சியானது UN17  பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு,  இந்த இலக்குகளுடன் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவி புரிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த SLASSCOM இன் பணிப்பாளர், அனுர டி அல்விஸ், “OIW Accelerate 2020 ஊடாக, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்றைய காலத்தின் மிக முக்கியமான சிக்கல்களைத் தீர்க்கும் பொருட்டு இலங்கையில் உள்ள ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க நாம் விரும்புகிறோம். இலங்கையில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உலக அளவில் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க நாங்கள் விரும்புகிறோம், ஏனெனில் ஒத்துழைப்பின் மூலம் மாத்திரமே மனிதகுலம் கொவிட் – 19 க்கு எதிராக போராடி வெற்றிபெற முடியும். இலங்கையில் IT/BPM துறையானது திறமை மற்றும் செயல் வல்லமையால் நிரம்பி வழிகின்ற போதிலும் பலருக்கும் வாய்ப்பு இல்லாமை மற்றும் ஊக்கமின்மை காரணமாக பின் தங்கியுள்ளது.  சிறந்த ஆற்றலைக் கொண்ட திட்டங்களை அடையாளம் காணவும்,  அவற்றுக்கு நிதி மற்றும் தார்மீக ரீதியாக ஆதரவை வழங்கவும், அதன் மூலம் இந்த யோசனைகள் உலகை மாற்றவும் OIW Accelerate 2020  உதவும். இந்த திட்டத்திற்கு அனுசரனை செய்ததற்காகவும், அவர்கள் எங்களுக்கு அளித்த அனைத்து ஆதரவிற்கும் இலங்கையின் ரோயல் நோர்வே தூதரகத்திற்கு நன்றி தெரிவிக்க இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்கின்றோம். தமது எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான இந்த சிறந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள, செயற்திறனுடன் போட்டியிட வருமாறு அனைத்து இலங்கை ஆரம்ப நிலை நிறுவனங்களையும் நாங்கள் வரவேற்கிறோம்,”என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் இலங்கையில் வணிகங்களை பதிவு செய்துள்ள அல்லது “StartupSL”  இணையதளத்தில் ஆரம்ப நிலை வணிகமாக பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆரம்ப நிலை  ICT வணிகங்களுக்கும் OIW Accelerate 2020 திறந்திருக்கும். ஒவ்வொரு நுழைவுதாரரும் குறைந்தபட்சம் ஏற்கனவே அடிப்படை முன்னோடி மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ள தயாரிப்பு அல்லது சேவையை தம்வசம் கொண்டிருக்க வேண்டும். இந்த தயாரிப்பு அல்லது சேவையானது கொவிட் – 19 ஐ நேரடியாக எதிர்த்துப் போராடுவது அல்லது அதனால் எழும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதை நோக்காகக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் UN17 பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன், பெருங்கடல், சுகாதார பராமரிப்பு, எரிசக்தி, ஃபெம்டெக் மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் ஆகிய ஐந்து நிபுணத்துவ பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

OIW Accelerate 2020 க்கு பெறப்படும் அனைத்து நுழைவுகளும் வணிகம் மற்றும் IT இல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு விசேட நடுவர் குழுவினால் பரிசீலிக்கப்படும்.

இதில் ஆறு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்வுகளின் தகுதிகளின் அடிப்படையில், ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ரூபா 500,000 / – மதிப்புள்ள உதவித் தொகை, OIW 2020 இல் தங்கள் தயாரிப்பு / சேவையை வெற்றிகரமாக முன் மொழிவதற்கான உதவி, வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையுடன், OIW 2020 இல் பங்கேற்பதற்கான உதவியும் கிடைக்கும். உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,  Oslo Innovation Week 2020 இம்முறை மெய்நிகர் நிகழ்வாக இடம்பெறுவதுடன், முன்னரை விட அதிக அணுகலையும், தெரிவுநிலையையும் பெறவுள்ளது. நுழைவுகளை ஏற்கும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், வெற்றியாளர்கள் ஓகஸ்ட் 20 இன் பின் அறிவிக்கப்படுவர்.

வழிகாட்டுதல்கள், தகுதி மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான மேலதிக  விவரங்களைப் பெற https://bit.ly/oiwaccelerate2020

SLASSCOM இலங்கையின் அறிவு மற்றும் புத்தாக்கத்திற்கான தொழில் துறையின் தேசிய சம்மேளனமாக திகழ்வதுடன், வர்த்தகம் மற்றும் வியாபார செயற்பாடுகளை ஊக்குவித்தல், கல்வி மற்றும் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தல், ஆய்வுகள் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றிற்கான ஊக்குவிப்பு நிறுவனமாகவும் தொழிற்படுவதுடன், IT/BPM தொழில் துறையின் வளர்ச்சிக்குரிய தேசிய கொள்கையின் கட்டமைப்பை உருவாக்குவதிலும் உதவுகிறது.  SLASSCOM இன் உறுப்பு நிறுவனங்கள் IT/BPM தொழில் துறையின் ஏற்றுமதி வருமானத்தில்சுமார் 90% பங்களிப்பு செய்கின்றன.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *