உலக சதுப்பு நில தினத்தில் ஹேமாஸின் சதுப்பு நில மறுசீரமைப்பு திட்டத்தில் வெற்றி

Author
By Author
6 Min Read

வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (WNPS) இணைந்து, ஆனைவிழுந்தான் ஈரவலய சரணாலயத்தை மீளமைப்பது தொடர்பான அதன் இயற்கையான மீளுருவாக்க திட்டத்தில் ஒரு மைல்கல்லை Hemas Consumer Brands எட்டியுள்ளது. முதன் முறையாக நாற்றுமேடையில் வளர்க்கப்பட்ட தாவரங்களை இந்த ஈரவலயத்தில் நடுகை செய்துள்ளதன் மூலம், 2022 பெப்ரவரி 02 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சதுப்பு நில தினத்தை நிறுவனம் நினைவுகூருகின்றது. ஹேமாஸின் சூழல் நலன் கொண்ட பொறுப்பு மிக்க பணியின் ஒரு பகுதியாக, இந்த 5 ஆண்டு திட்டம், அதன் 2 முதன்மையான வர்த்தக நாமங்களான பேபி செரமி மற்றும் குமாரிகா ஆகியவற்றின் அனுசரணையின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பறவைகள் ஆர்வலர்களுக்கு, ஆனைவிழுந்தான் ஈரவலய சரணாலயம் பறவைகளை பார்ப்பதற்கு செல்ல வேண்டிய ஒரு முக்கிய தளமாகும். புத்தளம் மாவட்டத்தின் ஆரச்சிக்கட்டு பிரதேச செயலகத்தில் 1,387 ஹெக்டயர் பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இது தங்கொட்டுவையில் உள்ள ஹேமாஸ் உற்பத்தி தொழிற்சாலைக்கு மிக அருகாமையிலாகும். ஒரு உண்மையான இலங்கை நிறுவனம் எனும் வகையில் ஹேமாஸ் நிறுவனமானது, நுகர்வோர் மற்றும் அவர்களது நலன்கள் தொடர்பில் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த சரணாலயத்திற்குள் அமைந்துள்ள சதுப்புநிலங்களை மீளுருவாக்கும் உன்னதப் பணிக்காக, WNPS உடன் கூட்டுச் சேர்ந்த முதலாவது நிறுவனமாக ஹேமாஸ் தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளது.

உலக சதுப்பு நில தினத்தை ஹேமாஸ் கொண்டாடும் இத்தருணத்தில், இச்சதுப்பு நிலத்தை அதன் பழைய நிலைக்கு கொண்டு வரும் வரை இத்திட்டத்தில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு இருக்குமென நிறுவனம் பெருமையுடன் சுட்டிக் காட்டியுள்ளது. பறவைகளுக்கான ஒரு முக்கியமான ஓய்விடம் எனும் வகையில், மீளமைக்கப்பட்ட சதுப்பு நிலங்கள், புலம்பெயர்ந்து வருகை தரும் பறவைகளின் தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்யும். அத்துடன் சதுப்பு நிலங்களில் உள்ள சுத்தமான நீர், இறால் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுவதால், ஆரோக்கியமான மீன் மற்றும் இறால் ஆகியன சதுப்பு நில விவசாயிகளுக்கான இயற்கை ஆதரவாக அமையும்.

Hemas Consumer Brands யினது பேபி செரமி சந்தைப்படுத்தல் முகாமையாளர் தனுஷ்க சில்வா இது தொடர்பில் தனது கருத்தை தெரிவிக்கையில், “நிலைபெறானதன்மை என்பது ஹேமாஸின் சிந்தனையில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதுடன், எமது அனைத்து நடவடிக்கைகளிலும் அது ஒரு வாழ்க்கை முறையாக பின்பற்றப்படுகிறது. Hemas Consumer Brands ஆனது WNPS உடன் இணைந்து, ஒரு வருடத்திற்கு முன்பு இந்தத் திட்டத்தைத் ஆரம்பித்த போது, ​​சதுப்பு நில மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த முதலாவது பெருநிறுவனமாக அது தனது பெயரை பதிவு செய்தது. சதுப்பு நிலங்கள் சூழல் தொகுதியின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். அது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான சூழலில் சமநிலையை பேணுவதற்காகவும், கடற்கரையை பாதுகாப்பதற்காகவும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனைவிழுந்தான் ஈரநில சரணாலயத்தை மீளமைப்பதில் நாம் வெற்றியடைந்துள்ளமை தொடர்பில் பெருமையடைகிறோம்.” என்றார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திற்கான நிதியின் ஒரு பகுதி, விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கும், சூழல் தொகுதியின் தொடர்ச்சியான பகுப்பாய்வு மற்றும் அளவீடுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனைவிழுந்தான் ஈரநில சரணாலயத்தில் மொத்தமாக 13 வெவ்வேறு சதுப்புநில இனங்களும் 264 தாவர இனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அவை மீள வளர்க்கப்படும்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் (DWC) பணிப்பாளர் (பாதுகாக்கப்பட்ட பகுதி முகாமைத்துவம்) மஞ்சுள அமரரத்ன கருத்து வெளியிடுகையில், “பாதிக்கப்பட்ட சதுப்புநிலங்களை விஞ்ஞான ரீதியாக மீளமைப்பதற்கு பொறுமை, விஞ்ஞானம், நன்கொடையாளர்களின் அர்ப்பணிப்பு, சமூகத்தின் ஆர்வம், நீண்ட கால கண்காணிப்பு ஆகியன அவசியமாகும். இம்முயற்சியானது ஏனைய இவ்வாறான தொகுதிகளில் திறம்பட பயன்படுத்தக்கூடிய பல்வேறு பாடங்களை எமக்கு கற்றுத் தரும். இயற்கைக்கும் மக்களுக்கும் பயனளிக்கும் இது போன்ற விஞ்ஞான ரீதியான செயற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள, அது தொடர்பில் உரிய கரிசனை கொண்ட நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்வதில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் (DWC) கவனம் செலுத்துகிறது.” என்றார்.

தாவர வளர்ப்பு செயற்பாட்டை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக, DWC மற்றும் WNPS ஏற்கனவே 8 இற்கும் அதிகமான தாவரங்களுக்கான தாவர நாற்று மேடை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இதில் Rhizophora mucronata, Loop-root mangrove ஆகியன 90% உயிர்வாழும் திறனைக் கொண்டுள்ளதன் காரணமாக, அவை அதிக எண்ணிக்கையில் இடம்பிடித்துள்ளன.

உள்ளூர் விவசாயியான டபிள்யூ.எஸ்.எஸ். பெனாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “என்னைப் போன்ற விவசாயிகளுக்கு சதுப்பு நிலங்கள் வளம் மிக்க வருமான ஆதாரமாகும். அவை குளங்கள் மற்றும் முகத்துவாரங்களை மண்ணரிப்பிலிருந்து பாதுகாப்பதுடன், கரையோர நீர் மாசடைவைக் குறைக்கின்றன. பொழுதுபோக்கு இடமாகவும், பறவைகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் இடமாகவும், எரிபொருளுக்கான மரத்தை தரும் இடமாகவும் பல்வேறு நன்மைகளை அது வழங்குகின்றது. மாசுக்களின் வெளியேற்றம், சட்டவிரோத கட்டுமானங்கள், நகரமயமாக்கம் போன்ற விடயங்கள் எமது வாழ்வாதாரத்தை ஆபத்தில் வீழ்த்தியுள்ளன. இந்த சதுப்பு நிலத்தையும் எமது பாரம்பரிய வாழ்க்கை முறையையும் பாதுகாப்பதை உறுதி செய்யும் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ள ஹேமாஸ் மற்றும் WNPS உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்.

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில், Hemas Consumer Brands யின் பிரதிநிதிகள், WNPS, DWC, உள்ளூர் விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது இத்திட்டத்தின் பலன்களை ஏனைய அனைவரும் அடையலாம் என அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் மற்றும் மீன்வளர்ப்பு பிரிவின் தலைமை பேராசிரியரான, பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி கருத்து வெளியிடுகையில், “கடந்த 30 ஆண்டுகளில், வாழ்விட அழிப்பு, சீரழிவு, நேரடிப் பயன்பாடு, உயிரினங்களின் மிகையான சுரண்டல்கள் போன்ற காரணங்களால் இலங்கையின் சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சதுப்பு நிலத்தின் இயற்கையான மீளுருவாக்கத்திற்காக, அவசியமான நிதி மற்றும் உரிய வளங்களை வழங்குவதன் மூலம் ஹேமாஸ் நிறுவனம் வழங்கும் பிரதான ஆதரவுடன் இந்த சதுப்பு நில மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பங்காளராக இருப்பதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

உலக சதுப்பு நில தினத்தையொட்டி, குறித்த மறுசீரமைப்பு தளத்திலும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகளின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் கால்வாய்களை செப்பனிடும் முயற்சிகளில் ஹேமாஸ் ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர். இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மாத்திரமல்லாமல், சமூக செயற்பாட்டுக்கான பகுதியிலும் மறுசீரமைப்பு அமைய வேண்டும் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

Hemas Consumer Brands மனிதவள சிரேஷ்ட முகாமையாளர் மஹிந்த விஜேசேகர தெரிவிக்கையில், “முழுமையான அணுகுமுறையுடன் இச்செயற்றிட்டத்திற்கு பங்களிப்பதை உறுதிசெய்துள்ள ஹேமாஸ், இத்திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கிய எமது தொழிற்சாலையைச் சுற்றியுள்ள சமூகங்களும், எமது ஊழியர்களும் இது தொடர்பில் உரிய அறிவைப் பெறவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமாக, அவர்களுக்கான பல்வேறு பயிற்சிகள் மற்றும் செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்திருந்தது. ஒரு உண்மையான இலங்கை நிறுவனம் என்ற வகையில், எமது தேசிய பாரம்பரியம் மற்றும் உயிர்ப் பல்வகைமையை அதன் பழைய நிலைக்கு கொண்டு சேர்க்கும் இந்நடவடிக்கை தொடர்பில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

Hemas Consumer Brands பற்றி

வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட  புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நிலைபேறான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதனை நோக்காகக் கொண்டு, நிறுவனம் பல வழிகளிலும் முற்போக்காக செயற்பட்டு முன்னணியில் திகழ்கிறது. அந்த வகையில், அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, மேலும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.

Photo caption

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு, ஆனைவிழுந்தான் ஈரவலய சரணாலயத்தின் சதுப்பு நிலத்தில், முதன் முறையாக நாற்றுமேடையில் இருந்து சதுப்பு நில தாவரங்களை நடும் நிகழ்வில் Hemas Consumer Brands, WNPS, DWC, உள்ளூர் விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் பங்குபற்றியிருந்தனர்.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *