இலங்கையில் வாகனப் பாவனையாளர்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள CMTA

Author
By Author
2 Min Read

வாகன உதிரிப் பாகங்களின் கொள்வனவு தொடர்பான LC வசதிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பில், சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கவலை வெளியிட்டுள்ளது. வங்கிகளின் இந்த உத்தியோகபூர்வமற்ற கட்டுப்பாடுகளால், இலங்கையிலுள்ள வாகனங்களின் பராமரிப்பு முடக்க நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது பொருட்களின் போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து மாத்திரமன்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். போக்குவரத்துத் துறை முடக்கத்திற்கு உள்ளானால், அது நாட்டின் முக்கிய வருமானத்தை வழங்குகின்றதும், போக்குவரத்தில் தங்கியுள்ளதுமான, ஏற்றுமதி மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் ஆபத்தான patch repair, போலியான உதிரிப் பாகங்கள் மற்றும் வெளிநாடுகளில் அகற்றப்பட்ட குப்பைக் கிடங்குகளில் இருந்து பெறப்பட்டு இறக்குமதி செய்யப்படும் உதிரிப் பாகங்களை பயன்படுத்த நேரிடுகின்றன. இந்த நடைமுறைகள் காரணமாக, வாகனங்களைப் பயன்படுத்துவோர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளுக்கு மேலதிகமாக, இந்த கட்டுப்பாடுகள் மற்றும் LC வசதிகளின் தாமதங்கள், முழு வாகன சந்தையிலும் நிச்சயமற்ற தன்மை மற்றும் தேவையற்ற பீதியை உருவாக்குவதுடன், உதிரிப் பாகங்களின் விநியோகம் அல்லது விலையை முறையான அனுமதிப்பத்திரம் கொண்டவர்களால் தீர்மானிக்க முடியாமல் போவதற்கும் காரணமாக அமைகிறது.

சுமார் இரண்டு வருட கால இறக்குமதித் தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இத்துறையில் அனுமதிப்பத்திரம் கொண்டவர்கள், தங்கள் ஊழியர்களுக்கும், ஏனைய செலவுகளை பூர்த்தி செய்யவுமாக, மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எஞ்சியுள்ள ஒரே வருமான ஆதாரமான, விற்பனைக்குப் பின்னரான சேவைகளை நிர்வகிப்பதில் தற்போது மேலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வாகனத் தொழிற்துறையின் அவலநிலை குறித்து கவனம் செலுத்துமாறும், இலங்கையிலுள்ள பழைய வாகனங்களை இயங்க வைப்பதற்கு அவசியமான உதிரிப் பாகங்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்குமாறும், கொள்கை வகுப்பாளர்களிடம் CMTA வலியுறுத்துகிறது. வாகன உற்பத்தியாளர்களினால் பரிந்துரைக்கப்பட்ட முறைகளுக்கமைய இந்த வாகனங்களை பராமரிக்க இயலாமல் போகும் நிலையில், எதிர்காலத்தில் பாரிய பழுது பார்ப்புகளையும், செயலிழப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். இது மேலும் பாரிய அளவில் வெளிநாட்டு நாணய இழப்பு ஏற்பட காரணமாக அமையும்.

1920 இல் நிறுவப்பட்ட, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) ஆனது, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அனுமதி பெற்ற ஒரேயொரு வர்த்தக சங்கமாகும். இது வாகன உற்பத்தியாளர்களால் உள்நாட்டில் நியமிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் கொண்டவர்களை (பொதுவாக ‘முகவர்’ என்று அழைக்கப்படுகிறது) பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதுவே பிராந்தியத்தில் மிகவும் பழமை வாய்ந்த வாகன வர்த்தக சங்கமாகும். CMTA வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான இலங்கையர்களை பணிக்கு அமர்த்தி, பயிற்சிகளை வழங்கும் அதே நேரத்தில், பொறியியல் மற்றும் முகாமைத்துவத்தில் சர்வதேச ரீதியாக கடைப்பிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகளையும் நாட்டிற்கு கொண்டு வந்து, நன்கு பயிற்றப்பட்ட மற்றும் வெளிநாடுகளில் தொழில் பெறும் ஆற்றல் கொண்ட ஒரு தொழிற்படையை உருவாக்குகின்றனர்.  CMTA உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தியாளர்களால் கணக்காய்வு செய்யப்படுவதோடு, இறக்குமதி செய்யும் வாகனங்களை உற்பத்தியாளரிடமிருந்து அவர்கள் நேரடியாக தருவிப்பதுடன், அவை இலங்கை சந்தை நிலைமைக்கு ஏற்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு, உரிய உற்பத்தியாளரின் முழு உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன.

– END –

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *