- குத்தகை மற்றும் வாடகைக் குறைப்பு
- செலவுப் பகிர்வை நோக்கிய ஆதரவு
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வர்த்தகத்தின் உச்ச அமைப்பான, இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), அதன் அங்கத்தவர்களின் குத்தகை மற்றும் வாடகையை குறைக்குமாறு நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் வணிகப் பங்காளிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் ஒரு வருடத்திற்கு SLRA உறுப்பினர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட மற்றும் வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்கள், அனைத்து வகையான பௌதீக உட்கட்டமைப்புகள் போன்றவற்றுக்கான வாடகை மற்றும் குத்தகைகளில் 50% சலுகையை வழங்குமாறு, நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களிடம் SLRA இன் தலைவர் முரளி பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், அனைத்து வணிக கூட்டாளர்களையும் முடிந்தவரை ஏனைய செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒட்டுமொத்த தொகுதி வலையமைப்பையும் பாதுகாப்பதற்காக இந்தத் துறையானது, இந்த கடினமான காலங்களில் நிலைபேறானதாக இருப்பதை உறுதிசெய்கிறது.
குறைவான தொழிற்பாட்டுடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் மேற்கொண்ட போராட்டத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமற்ற வகையிலான அந்நியச் செலாவணி நிலைமை காரணமாக, பல சில்லறை வணிகங்களை வீழ்ச்சியை நோக்கி தள்ளியுள்ளது. பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை பெரிதும் நம்பியிருப்பதால், வணிக நிலைபேறானதன்மையை கணிசமாக பாதிப்படையச் செய்துள்ளது. தற்போதைய டொலர் நெருக்கடியானது வருமானத்தை தொடர்ச்சியாக கணிசமான வகையில் குறைக்கும் என்பதுடன், வளர்ச்சியைத் தடுத்து, அனைத்து செயல்பாட்டு நிலைகளையும் பாதிக்கும் வகையிலான பௌதீக உட்கட்டமைப்பைப் பராமரிப்பதை சவாலுக்குட்படுத்தும். அத்துடன், செலவு அதிகரிப்பானது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
இச்சூழ்நிலையின் காரணமாக, சில்லறை விற்பனையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டாண்மைகளை உருவாக்கி, சவால்களை சமாளிக்க அனைத்து பிரிவுகளிலும் செலவுப் பகிர்வைச் செயல்படுத்துவதற்கான அவசர தேவை உணரப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது வணிகப் பங்காளிகளின் தங்களுக்குள் பகிரப்பட்ட நோக்கின் மூலம் மாத்திரமே இத்தகைய பாதகமான நிலைமைகளை சமாளிக்க முடியுமென, SLRA நம்புகிறது. அவர்கள் ஒன்றிணைந்து நிற்பதன் மூலம், அனைத்து செலவுகளையும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதுடன் இதன் மூலம் அவர்களது வணிகங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளவும் முடியும். அவ்வாறு இல்லையெனின், சில்லறை விற்பனையாளர்கள் குறைந்த வாடகை இடங்களை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதுடன், இது நில உரிமையாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதுடன் அது அவர்களது வருமானத்தை குறைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம். சில்லறை வாடிக்கையாளர்களின் கிளைகள் குறைக்கப்படுமானால், இதேபோன்ற தாக்கம் ஏனைய வணிக கூட்டாளர்களுக்கும் ஏற்படும். எனவே, அனைவரின் நலனுக்காகவும், செலவுப் பகிர்வு மூலோபாயம் நிறுவப்பட வேண்டும்.
நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் ஏனைய வணிக கூட்டாளர்கள் குறைக்கப்பட்ட வாடகைகள் மற்றும் ஏனைய செலவுப் பகிர்வு விடயங்கள் மூலம் செலவின் ஒரு பகுதியை பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள் என SLRA எதிர்பார்க்கிறது. இது சிறந்த எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். குத்தகைதாரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள், ஏனைய வணிக கூட்டாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தும் என அது தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எதிர்காலத்தில் அனைத்து தரப்பினரும் பயனடைவதற்கு இத்தொழில் துறையானது தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும். எனவே இதற்கான வழி, ஒரு கூட்டு நடவடிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதாகும்.
சாதகமான மற்றும் பாதகமான அனைத்து காலங்களிலும், சில்லறை விற்பனையாளர்கள் உள்ளூர் பொருளாதாரத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்துள்ளனர். அந்த வகையில், தற்போது அனைத்து வணிக கூட்டாளர்களிடமிருந்தும் அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளமையானது ஒரு விதிவிலக்கான நிலையே. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை சில்லறை வணிகம் கொண்டுள்ளதுடன், அது இலங்கையின் வேலைவாய்ப்பில் 15% இற்கும் அதிகளவை கொண்டுள்ளது. செயற்றிறன் மிக்க சில்லறை வணிகமானது, ஆரோக்கியமான மற்றும் வலுவான பொருளாதாரத்தின் இன்றியமையாத பகுதியாகும். எனவே, தேசத்தின் நன்மைக்காக இந்நேரத்தில் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஆதரவளிக்க அனைத்துக் தரப்பினரும் ஒன்றிணைவது கட்டாயமாகும்.
கேள்வி அதிகம் கொண்ட நுகர்வோர் பொருட்கள் (FMCG), ஆடைகள், அழகுசாதனங்கள் மற்றும் நகைகள், தங்குமிடம் மற்றம் வீட்டுவசதி, வீட்டு பயன்பாட்டு பொருட்கள், பாதணிகள் மற்றும் அணிகலன்கள், இணைய வர்த்தகம், பொருட்களின் போக்குவரத்து, பொழுதுபோக்கு, உணவகங்கள் மற்றும் விரைவு உணவகங்கள் (QSR), உடல்நலன் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட சில்லறை வர்த்தகத்தின் ஒன்பது துறைகளை SLRA பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
அந்த வகையில், SLRA அதன் உறுப்பினர்களுக்கு வழங்கவுள்ள ஆதரவு தொடர்பில், அனைத்து தரப்பினருக்கும் முன்கூட்டியே நன்றியைத் தெரிவிக்கிறது.
END